Tuesday, January 25, 2022

மரம் போல வாழ...

மரம் போல் வாழ வரம் வேண்டும்... 

பறவை க்கும் விலங்கு க்கும்
உலா போகும் இடமாக 
உணவருந்தும் மேடையாக
துஞ்சும் இடமாக
துயில் தரும் தலையணை யாக... 

மரம் போல வாழ வரம் வேண்டும்... 

மரிக்காமல் மண்ணுடன் மகிழ்ந்துறவாட
அம்மண் நீர்த்துப் போகாமல்
அணைத்துக் கொள்ள
மண் புழுவுடன் போட்டி போட்டு உழவுக்கு உதவ... 

மரம் போல வாழ வரம் வேண்டும்...

வருடம் ஒரு முறையாவது, இலைகளைத் துறந்து
உயிரற்ற உறைந்த ஓவியமாக சில மாதங்கள் வாழ்ந்து
பின் புதிய இலைகளை பெற்றெடுக்க...

மரம் போல வாழ வரம் வேண்டும்...

Monday, January 14, 2019

காதல் வைரஸ்

வழக்கமாக...
என் கை கால்களை பதம் பார்க்கும் கொசு...
இம்முறை என் கன்னத்தை கடித்தது...

பாவம்... அதற்கு தெரிய வாய்ப்பில்லை...
உன்னைக் கடித்த பின்...
உன்னுள் உள்ள காதல் வைரஸ் தன்னுள் தொற்றி கொண்டதென்று...

Friday, September 7, 2018

நிறுத்த நினையாமல்...

நாளை வரும் என்ற நினைவாலும்....
அந்த நாளையில் நீ வருவாய் என்ற
நம்பிக்கையாலும்....
நாழிகைகள் ஓடுது....நாட்களும் நகருது....

கடி காரங்களை நிறுத்தலாம்....
காலத்தை நிறுத்த முடியாது....
அப்படியே நிறுத்தினாலும்...
நம் காதலும் அல்லவோ உடன் நின்று போகும்....

ஓடும் நேரத்தை நிறுத்த நினையாமல்...
அது
ஓடி முடியும் முன் இணைந்து விடுவோம் வா....

Sunday, September 10, 2017

அலைகள்

அலைகள்...

பூமியிலுள்ள எல்லா கடற்கரைகளின் ஒருமித்த முதல் அடையாளம்...
அலைகள்...

கடல் நீருடன் ஆடும் காற்றின் விளையாட்டுக்கு பிறந்தது...
அலைகள்...

கால மாற்றத்தில் மாறாதது...
தட்ப வெப்பத்தை தவிடு பொடி ஆக்கக்கூடியது...
அலைகள்...

முடிவின்றி பூமியில்  நிகழும் கோடிக்கணக்கான வற்றில் முக்கியமானது....
அலைகள்....

சூரியனும் சந்திரனும் உறங்கும் போதும் உறங்காதது...
அலைகள்...

விடையில்லா விடா முயற்சிகளின்  வெறுக்க முடியாத உதாரணம்...
அலைகள்...

தன் மீது விளையாடும் மாந்தர்களை ஸ்பரிசிக்கவோ...
அல்லது அவர்களின் காலடி மண் திருடவோ...
அவர்கள் கட்டி வைத்த மணல் கோட்டைகளை இடிக்கவோ....
உயிறற்ற கிளிஞ்சல் களை கரை சேர்க்கவோ...
ஓடும் நண்டுகளில் ஒன்றையாவது உள்ளிழுக்கவோ...

இப்படி எதற்காக வந்தோமென தெரியாமலே...
ஆக்ரோஷமாய் கரை தழுவி...
அனுதாபமாய் நுரை கக்கி... பின் அமைதியாய் மீண்டும் கடலைச் சென்றடையும்...
அலைகள்...

Wednesday, August 23, 2017

நீ உடனிருக்கும் வரை...

அன்பு தந்தேன்... அதை
காதலாக்கினாய்...

தண்ணீர் தந்தேன்... அதை
தேனாக்கினாய்...

தாலி கட்டினேன்... எனக்கு
வாழ்வு தந்தாய்...

விதை கொடுத்தேன்... அதை
விழுதாக்கினாய்...

வீடு வாங்கினேன்... அதை
இல்லமாக்கினாய்...

கவலை கொண்டேன்... அதை
களிப்பாக்கினாய்....

சுருண்டு விழுந்தேன்... சுகம் தந்து
எழுப்பினாய்...

தோல்வி அடைந்தேன்... ஆறுதல் சொல்லி தேற்றினாய்....

தலைவலி என்றேன்... தடவிக்
கொடுத்தாய்...

வாழ்வை தேடிக் கொண்டிருந்தேன்...
கையில் கொடுத்தாய்....

நம் வாழ்வில் அடுத்ததாக என்ன வருமென நானறியேன்...
எதுவாயினும் நான் தேடும் தோள்
உனதென்பதை அறிவேன்...

நான் பயணிக்கும்
பாலைவனமும் சோலையாகும்....
நீ உடனிருக்கும் வரை...

Friday, June 9, 2017

தாலாட்டும் சங்கீதம்

யாரின் குரல் இது...
யார் பாடும் தாலாட்டு இது...

அம்மா வின் குரலெனில் தூங்கியிருப்பேன்....

மனைவியின் குரலெனில் தூங்காமல் விழித்திருப்பேன்....

மகளின் குரலெனில் தூங்க வைத்திருப்பேன்....

கொசுவின் குரலானதால்...
தூங்கவும் முடியாமல்...
விழிக்கவும் முடியாமல்...

என் கைகள் இரண்டையும் எமனின் பாசக்கயிராக்கி...
அந்தக் எமகாதக கொசுவை தேடிக்கொண்டிருக்கிறேன்.....

(என்) வீடு

என் படுக்கையறையில்
கொசுவுக்கு என்ன வேலை 
என்று கேட்ட மனிதனைப் பார்த்து

பூமி சொன்னது

எனது ஏரியின் களிமண் செங்கல்லாகி உன் வீட்டு சுவரானது...
என் ஆற்றின் மணற்படுகைகள்
அச்சுவரின் பூச்சாகின...
என் நிலத்தில் கிடைத்த கனிமங்கள் உலோகங்களாகி உன் வீட்டின் கம்பிகளாயின....
என் காட்டில் வெட்டிய மரங்கள்
கதவுகளாயின....

இப்படி​ என் வளங்களிலிருந்து கட்டப்பட்ட அந்த வீட்டை நீயும் கொசுவும் மட்டுமே அனுபவிப்பது ஒரு வித வஞ்சனையே....

என்னுள் வாழும் மற்ற உயிரினங்கள் அங்கே புகும் நாள் வெகு தொலைவிலில்லை....