Wednesday, April 4, 2012

சுயநலவாதியாக இருக்க வேண்டும்...

இன்றைய உலகில் நாம் எல்லோரும் சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்று கருத்து உள்ளது...
எப்படிப்பட்ட சுயநலவாதியாய் இருக்க வேண்டும் என்பது பற்றிய சில எண்ணங்கள் கீழே...


கிணற்றுத்தவளை போல், தன்பணி மீது மட்டுமே
கவனம் கொண்ட சுயநலவாதியாக இருக்க வேண்டும்

அப்பணி பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் செய்து முடித்திடும்
திறமைமிகு சுயநலவாதியாக இருக்க வேண்டும்

எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்காத
இரும்பு இதயம் கொண்ட சுயநலவாதியாக இருக்க வேண்டும்

பிறரைப் பற்றி பேச நேரமில்லாது உழைத்துக் கொண்டேயிருக்கும்
எறும்பின் குணம் கொண்ட சுயநலவாதியாக இருக்க வேண்டும்

தன்னையும்  தன்னைப் போல் எல்லா உயிரையும்
மதிக்கும் சுயநலவாதியாக இருக்க வேண்டும்

பிறரின் வெற்றியை வாழ்த்தவோ விமர்சிக்கவோ அறியாத
பேதை சுயநலவாதியாக இருக்க வேண்டும்

பிறர் பற்றி சொல்லப்படும் விமர்சனங்களை கேட்க முடியாத
செவிட்டு சுயநலவாதியாக இருக்க வேண்டும்

மற்றவரின் குறைகளைக் காண முடியாத
குருட்டு சுயநலவாதியாக இருக்க வேண்டும்

மற்றவரிடம் உதவி கேட்க நா எழாத
ஊமை சுயநலவாதியாக இருக்க வேண்டும்

கொடுத்தக் கடனைச் சென்று திருப்பிக் கேட்கும் நிலை வரின்
கால்கள் மரத்துப்போய்விடும்
நொண்டி சுயநலவாதியாக இருக்க வேண்டும்

இப்படி ஒரு சுயநலவாதியை இவ்வுலகம் பரிகசித்தால்
வெகுசுலபமாக பிறர் மீது பழி சொல்லாது
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எனச் சொல்லும்
தைரியமுள்ள சுயநலவாதியாக இருக்க வேண்டும்

யார் சொன்னது சுயநலவாதிகள் கோழைகள் என்று....

இருந்து தான் பாருங்களேன் இப்படி ஒரு சுயநலவாதியாக
உலகம் ஒரு நாள் சொல்லலாம்
'சுயநலவாதிகளை எல்லோரும் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல' என்று

                                       - பாலா(ஜி)


பி.கு. :
வாழ்த்தினால் வெற்றியில் பங்கு கொள்ள வந்தவன் என்பர்...
விமர்சித்தால் வயிற்றிரிச்சல் கொண்டவன் என்பர்...
ஆதலால் இரண்டும் வேண்டாம் என்பேன் நான்...
பிறரின் வாழ்த்தலும் விமர்சித்தாலும் தன்னை பாதிக்காத வண்ணம் வாழ்பவனே உண்மையில் வெற்றி கொண்டவன்...
அவன் உங்கள் மௌனத்தை கண்டிப்பாய் புரிந்து கொள்வான்...