Wednesday, August 23, 2017

நீ உடனிருக்கும் வரை...

அன்பு தந்தேன்... அதை
காதலாக்கினாய்...

தண்ணீர் தந்தேன்... அதை
தேனாக்கினாய்...

தாலி கட்டினேன்... எனக்கு
வாழ்வு தந்தாய்...

விதை கொடுத்தேன்... அதை
விழுதாக்கினாய்...

வீடு வாங்கினேன்... அதை
இல்லமாக்கினாய்...

கவலை கொண்டேன்... அதை
களிப்பாக்கினாய்....

சுருண்டு விழுந்தேன்... சுகம் தந்து
எழுப்பினாய்...

தோல்வி அடைந்தேன்... ஆறுதல் சொல்லி தேற்றினாய்....

தலைவலி என்றேன்... தடவிக்
கொடுத்தாய்...

வாழ்வை தேடிக் கொண்டிருந்தேன்...
கையில் கொடுத்தாய்....

நம் வாழ்வில் அடுத்ததாக என்ன வருமென நானறியேன்...
எதுவாயினும் நான் தேடும் தோள்
உனதென்பதை அறிவேன்...

நான் பயணிக்கும்
பாலைவனமும் சோலையாகும்....
நீ உடனிருக்கும் வரை...

Friday, June 9, 2017

தாலாட்டும் சங்கீதம்

யாரின் குரல் இது...
யார் பாடும் தாலாட்டு இது...

அம்மா வின் குரலெனில் தூங்கியிருப்பேன்....

மனைவியின் குரலெனில் தூங்காமல் விழித்திருப்பேன்....

மகளின் குரலெனில் தூங்க வைத்திருப்பேன்....

கொசுவின் குரலானதால்...
தூங்கவும் முடியாமல்...
விழிக்கவும் முடியாமல்...

என் கைகள் இரண்டையும் எமனின் பாசக்கயிராக்கி...
அந்தக் எமகாதக கொசுவை தேடிக்கொண்டிருக்கிறேன்.....

(என்) வீடு

என் படுக்கையறையில்
கொசுவுக்கு என்ன வேலை 
என்று கேட்ட மனிதனைப் பார்த்து

பூமி சொன்னது

எனது ஏரியின் களிமண் செங்கல்லாகி உன் வீட்டு சுவரானது...
என் ஆற்றின் மணற்படுகைகள்
அச்சுவரின் பூச்சாகின...
என் நிலத்தில் கிடைத்த கனிமங்கள் உலோகங்களாகி உன் வீட்டின் கம்பிகளாயின....
என் காட்டில் வெட்டிய மரங்கள்
கதவுகளாயின....

இப்படி​ என் வளங்களிலிருந்து கட்டப்பட்ட அந்த வீட்டை நீயும் கொசுவும் மட்டுமே அனுபவிப்பது ஒரு வித வஞ்சனையே....

என்னுள் வாழும் மற்ற உயிரினங்கள் அங்கே புகும் நாள் வெகு தொலைவிலில்லை....

Monday, February 27, 2017

கண்டுபிடித்தாள்...

கண்டுபிடித்தாள்...


நான் உண்மை உரைக்கவில்லை என்பதை கண்டுபிடித்தாள்...
நான் பொய் சொல்கிறேன் என்பதையும் கண்டுபிடித்தாள்...

நான் துடிக்கிறேன் என்பதை கண்டுபிடித்தாள்...
நான் நடிக்கிறேன் என்பதையும் கண்டுபிடித்தாள்...

ஏனோ... 
என் காதலையும் அதற்க்காக நான் சிந்திய கண்ணீரையும் மட்டும் 
அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை...

எதிர்ப்பவன் நான்....


(எதை) எதிர்ப்பவன் நான்....

நான் தெய்வத்தை எதிர்ப்பவன் அல்ல...
தெய்வத்தையும் (சாத்தானையும்) கல்லுக்குள் வைப்பதை எதிர்ப்பவன்...

நான் கல்லை எதிர்ப்பவன் அல்ல...
அக்கல்லை கோவிலுக்குள் அடைப்பதை எதிர்ப்பவன்...

நான் கோவிலை எதிர்ப்பவன் அல்ல...
கோவிலில் வழக்கத்திலுள்ள ஜாதியத்தை  எதிர்ப்பவன்...

நான் ஜாதியத்தை எதிர்ப்பவன் அல்ல...
ஜாதியின் பெயரால் செய்யப்படும் அடக்குமுறையை எதிர்ப்பவன்...

நான் அடக்குமுறையை எதிர்ப்பவன் அல்ல...
நலிந்தோரை அவ்வண்ணமே வைத்திருக்கும் சதியை எதிர்ப்பவன்...

நான் சதியை எதிர்ப்பவன் அல்ல...
அந்தச் சதியால் சமுதாயத்தின் ஒரு பகுதி தாழ்த்தப்படுவதை எதிர்ப்பவன்...

நான் தாழ்த்தப்படுவதை எதிர்ப்பவன் அல்ல...
தாழ்த்தப்படுதல் பிறப்பால் முடிவு செய்யப்படுவதை எதிர்ப்பவன்...

இதோடு சேர்த்து....
'எதிர்ப்பதனால் எதிரி' என்ற எண்ணத்தையும் எதிர்ப்பவன் நான்...

Tuesday, January 7, 2014

நினைவுகள்...

கைப்பேசி இல்லை - அதில் பேசும் நடுநிசி நேர கதைகள் இல்லை...

குறுந்தகவல்கள் இல்லை - அதை
நெடுந்தகவல்கள் ஆக்கிடும் செய்திகள் இல்லை...

மின்னஞ்சல்கள் இல்லை - அதில் 
உன் கொஞ்சல்கள் இல்லை...

இப்போது உன்னை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதெல்லாம்...

அழகாய் இருக்கு என்று நீ சொன்னதால் விட்டு வைத்த தாடியும்...
உன்னுடன் பேசும் போது நான் நின்ற ஜன்னலும் தான்...

நினைவு நிற்குது பரிசாக...
நாளும் ஓடுது தரிசாக...

யாது.?

உலகம் யாது?
உருண்டோடுவது - நம்மை
உருண்டோட வைப்பது...

மழை யாது?
வானம் கரை புரண்டு அழுவது...
அதை பூமி ஆரத் தழுவுவது...

மொழி யாது?
குழந்தை பேசுவது...
யாருக்கும் புரியாதது...

சாதி யாது?
ஒன்று திரட்டுவது - பின்
ஒதுக்கி வைப்பது...

கடவுள் யாது?
கண்ணில் அன்பு காட்டுவது...
கல்லில் கிடைக்காதது 
எளிதில் காணக் கிடைக்காதது...

கோவில் யாது?
கல் வசிக்கும் இடமானது...
கடவுள்கள் வந்து போகும் இடமானது...

பணம் யாது?
சுலபத்தில் கிட்டாதது...
சுயநலத்திற்க்கு கிட்டாதது...

மனம் யாது?
உள்ளிருந்து உருத்துவது...
உள்நுழைய முடியாதது...

குறள் யாது?
ஈரடி இலக்கியமானது...
நூறாண்டுகள் வாழ தேவையானது...

அறிவு யாது?
அறிய வைப்பது...
அதைப் புரிய வைப்பது...
பின் தெளிய வைப்பது...

கவிதை யாது?
கருத்தைச் சொல்வது - பின் வரும்
எதிர்ப்பை எதிர்கொள்வது...