Tuesday, January 7, 2014

நினைவுகள்...

கைப்பேசி இல்லை - அதில் பேசும் நடுநிசி நேர கதைகள் இல்லை...

குறுந்தகவல்கள் இல்லை - அதை
நெடுந்தகவல்கள் ஆக்கிடும் செய்திகள் இல்லை...

மின்னஞ்சல்கள் இல்லை - அதில் 
உன் கொஞ்சல்கள் இல்லை...

இப்போது உன்னை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதெல்லாம்...

அழகாய் இருக்கு என்று நீ சொன்னதால் விட்டு வைத்த தாடியும்...
உன்னுடன் பேசும் போது நான் நின்ற ஜன்னலும் தான்...

நினைவு நிற்குது பரிசாக...
நாளும் ஓடுது தரிசாக...

யாது.?

உலகம் யாது?
உருண்டோடுவது - நம்மை
உருண்டோட வைப்பது...

மழை யாது?
வானம் கரை புரண்டு அழுவது...
அதை பூமி ஆரத் தழுவுவது...

மொழி யாது?
குழந்தை பேசுவது...
யாருக்கும் புரியாதது...

சாதி யாது?
ஒன்று திரட்டுவது - பின்
ஒதுக்கி வைப்பது...

கடவுள் யாது?
கண்ணில் அன்பு காட்டுவது...
கல்லில் கிடைக்காதது 
எளிதில் காணக் கிடைக்காதது...

கோவில் யாது?
கல் வசிக்கும் இடமானது...
கடவுள்கள் வந்து போகும் இடமானது...

பணம் யாது?
சுலபத்தில் கிட்டாதது...
சுயநலத்திற்க்கு கிட்டாதது...

மனம் யாது?
உள்ளிருந்து உருத்துவது...
உள்நுழைய முடியாதது...

குறள் யாது?
ஈரடி இலக்கியமானது...
நூறாண்டுகள் வாழ தேவையானது...

அறிவு யாது?
அறிய வைப்பது...
அதைப் புரிய வைப்பது...
பின் தெளிய வைப்பது...

கவிதை யாது?
கருத்தைச் சொல்வது - பின் வரும்
எதிர்ப்பை எதிர்கொள்வது...

காத்திருத்தல்...

நேரம் என்னைப் பார்த்து நிற்க...
நான் நேரத்தைப் பார்த்து நிற்க...

இருவரும் காத்திருந்தோம்
உன் அழைப்புக்காக...

இலவச மின் சுடுகாடு...

கட்டணமில்லாமல்
வரிசையில்லாமல்
முன் பதிவில்லாமல்
மின்வெட்டில்லாமல்

இலவசமாய் கிடைத்தது 
கொசுவுக்கு
ஒரு மின்சார சுடுகாடு 
"கொசு அடிக்கும் பேட்"

அன்னைக்கு ஒரு கடிதம்...

அன்னைக்கு ஒரு கடிதம்...

அடுப்படி தாண்டி அகிலம் காணாதவளே...
கண்டவன் சொல்கிறேன் கேள்...

நாடுண்டு... எல்லையுண்டு...
எல்லை தாண்டினால் சண்டையுண்டு...

வீடுண்டு... வாசலுண்டு... கூடுண்டு...
அடைகாக்கும் குடும்பமுண்டு...
தன் மகனை இளவரசனாகவும்...
தன் மகளை இளவரசியாகவும்...
எண்ணும் பெற்றோருண்டு...

நண்பர்களுண்டு... நையாண்டியுண்டு...
மாற்றார் நகைப்பின் எதிர்க்கும் தோழமையுண்டு...

உறவுண்டு... பிரிவுண்டு... ஊடலுண்டு... கூடலுண்டு...
அனைத்திலும் தோள் கொடுக்கும் உறவும் நட்பும் உண்டு...

இனமுண்டு... பிரிவுண்டு... மொழிஉண்டு...
அதைக் காக்கும் உணர்வுண்டு...
அதற்க்காக சண்டையிடும் உரிமையுண்டு...

நேர்மையுண்டு... எளிமையுண்டு... வலிமையுண்டு...
வாக்கில் இனிமையுண்டு...

சட்டம் உண்டு...
அதைக் காக்கும் சமூகமுண்டு...
மீறினால் தண்டிக்கும் அரசாங்கமுண்டு...

இயற்கை வளமுண்டு...
அதைக் காக்கும் தளராத மனமுண்டு...

தொழில் உண்டு...
அதை தெய்வமாய் பேணும் தொழிலாளருண்டு...
அவர் நலனுக்காய் போராடும் அரசியலுண்டு...

பண்பாடு மாறாது... நல்லவற்றை மட்டுமே எழுதியிருக்கிறேன்...

இருக்கும் உலகில் இல்லாமையும் உண்டு...
மேற்கூறியவை யாவும் நிறைந்து இல்லாமல் சில வேறுபாடுகளுமுண்டு...

என்னிடம் உள்ளவை...
நானே சமைக்கும் உணவுண்டு... தேவைக்கு மருந்துண்டு...

உன்னுடன்
உரையாட கைப்பேசியுண்டு...
காண skype உண்டு...
ஊரில் வீடு சரிசெய்ய சிறிது பணமுண்டு...

உடன் இல்லாத
தாய், தந்தை, இனம், மொழி, ஊர், மக்கள்,
இவற்றைப் பற்றி எண்ண இயலாத நிலையில் வேலையுண்டு...